தமிழகத்தில் கோவிந்த ராஜசேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வருகிறார். இதற்காக அவர் இணைய தளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு என்ற பெண், கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனது போட்டோவை அனுப்பினால் 51 வயது என்பது வெளியில் தெரிந்துவிடும் என்பதால் தனது உறவுக்காரரான 25 வயதுள்ள பெண்ணின் புகைப்படத்தை அனுப்பினார்.
இதனை பார்த்த கோவிந்த ராஜசேகர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனால் உடனடியாக பணம் தேவைப்படுகிறது என்று கோவிந்தராஜசேகரிடம் மல்லிகா கூறினார். இதனை நம்பிய கோவிந்தனும் ரூ.2,80,000 அனுப்பி உள்ளார். ஆனால் அதன்பிறகு மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். மேலும் திருமணத்தையும் தள்ளிப் போட்டபடி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜ் சேகர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மல்லிகாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி திருமண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மல்லிகா சிங்கப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.