உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஆசனம் செய்வது மிக அவசியமானதாகும். தற்போதைய தொற்று நோய் காலகட்டத்தில் ஜிம் மற்றும் பூங்காக்கள் மூடப் பட்டிருப்பதால் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தவாறு ஆசனங்கள் செய்யலாம். எளிய யோகாசனங்களை பின்பற்றுவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது. மேலும் உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும் மனதை நிதானமாகவும் வைத்திருக்க ஒவ்வொருநாளும் நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகள் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம். விருக்ஷாசனம் செய்தால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் விருக்ஷாசனம் என்றால் மரம் போன்ற தோற்றம் எனப் பொருள்படும்.
இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் நேராக நிற்கவும் அதன் பின் உங்கள் கைகளை மேலே நகர்த்தி உள்ளங்கைகளை ஒன்றாக இணைக்க வேண்டும். ஒரு காலில் சமநிலையை பராமரிக்கும் போது மற்றொரு காலை எடுத்து நிற்கும் காலின் தொடை அருகே கொண்டு வந்து நிற்கவும். சில நொடிகள் இதே நிலையை பின்பற்றி சீராக நிற்க வேண்டும். அதன்பின் இந்த ஆசனத்தின் போது சாதாரணமாக மூச்சு விட வேண்டும். இதனை காலை அல்லது மாலை நேரத்தில் செய்யலாம்.
தடாசனம்: இந்த ஆசனத்திற்கு கால்களை நேராக நிற்பதுடன் தொடங்குங்கள். நமஸ்தே முத்ராவில் கைகளை நேராக காற்றில் வைத்திருக்கும் போது உங்கள் விரல்களை ஒன்றுடன் ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கணுக்கால் உயர்த்தி தோள்பட்டை நேராக வைத்து இணைத்துள்ள கைகளை நேராக நீட்டவும். அதன் பின் கைகளை மேலே தூக்கி தலைக்கு நேராக வைத்து சீராக மூச்சு விடவும் சில நிமிடங்களுக்கு பின் கைகளை தளர்த்தி கொள்ளுங்கள் இந்த ஆசனம் உங்கள் தசைகளை வலுப்படுத்தும்.
உத்தனாசனம்: இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். தற்போது மூச்சை வெளியேற்றிய வரை இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும் வயிறு தொடைகளில் அமிழ்ந்து இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டு வந்து தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும் மேலும் இந்த ஆசனம் பின்புற வலி, கைகளில் வலி, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும்.
புஜங்காசனா: புஜங்கம் என்றால் சமஸ்கிருத மொழியில் ராஜநாகம் என பொருள்படும். இது கோப்ரா நிலை எனவும் அழைக்கப்படுகிறது. இது யோகாசனங்களில் முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஒரு ஆசனம் ஆகும். இந்த ஆசனத்தை செய்ய வயிறு பகுதி தரையில் படுமாறு படுக்க பின்னர் கால்களை தரையில் ஊன்றி கால்களை நேராக நீட்டவும். ராஜநாகம் படம் எடுப்பதை போல் கைகளை மடக்கி உடலை நேராக வைத்து சுவாசிக்கவும் வயிற்றுப் பகுதி தரையில் நன்றாக படும்படி இதனை செய்ய வேண்டும். இந்த ஆசனம் முழு உடலையும் பலப்படுத்தும் மற்றும் முதுகெலும்பை நிகழ்வாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றது.