மதுரை சந்திப்பு தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மதுரை தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 26ஆம் தேதி காணொளி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ரயில் சேவையானது மதுரை தேனி விரைவு ரயில் எண் (06701) மதுரையில் இருந்து காலை 8 .5 மணிக்கு புறப்பட்டு 8.20 மணிக்கு வடபழஞ்சி 8.53 மணிக்கு உசிலம்பட்டி 9.15 ஆண்டிப்பட்டி என இறுதியாக 9.35மணிக்கு தேனி சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் தேனி – மதுரை முன்பதில்லாத விரைவு ரயில் எண் (06702) தேனியில் இருந்து மாலை 18.15 மணிக்கு புறப்பட்டு 18.34க்கு ஆண்டிப்பட்டி, 18.54 மணிக்கு உசிலம்பட்டி, 19.29 மணிக்கு வடபழஞ்சி என 19.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரயில் சேவையால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் மதுரை தேனி இடையே ரயிலை இயக்குவது மிக பெரிய சவாலாக இருக்கிறது என கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் மதுரை தேனி இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் வருகிறது என தெரிந்து கொண்டே பொதுமக்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வது மட்டுமல்லாமல் செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் மதுரை தேனி இடையே ரயில் இயக்கம் சவாலாக இருக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் மதுரை தேனி ரயிலை தற்போது சென்னை வரை நீட்டிக்கும் திட்டம் இல்லை என அவர் கூறியுள்ளார்.