Categories
தேசிய செய்திகள்

#Budget Live : வேளாண்மைத் துறைக்கான சிறம்பம்சங்கள்…!!

2020 மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கு அறிவிக்கப்பட்ட செயல்திட்டங்களின் சிறப்பம்சங்கள் இதோ…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்திரா காந்திக்கு பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதிநிலை அறிக்கை இது. இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல்செய்யும் நாட்டின் மத்திய நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் துறையை முன்னேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பட்ஜெட்டின் நோக்கம் எனக் கூறி வேளாண் துறைக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கத் தொடங்கினார்.

வேளாண் துறை பட்ஜெட்டின் சிறப்பம்சம்கள்

வேளாண்மை தொடர்பான மூன்று புதிய சட்டங்களை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்

பண்ணை தொழிலை தனியார் நிறுவனங்களைக் கொண்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய மின்சக்தியில் இயங்கும் மின் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும்

வேளாண் சந்தையைத் தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து வகையான உரங்களையும் சமமாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களின் மீது தனிக்கவனம் செலுத்தப்படும்.

கிராமப்புற பெண்களுக்கு ‘தானிய லட்சுமி’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

விளைப்பொருள்களை எளிதாக விநியோகிக்க தனியார் பங்களிப்புடன் குளிர்சாதன வசதியுடன் தனி ரயில் வசதி செய்துதரப்படும்; விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பிலும் விவசாயிகளுக்கான விமான சேவை தொடங்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.

நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு கிராமப்புற மேம்பாட்டிற்கு, 1.23 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மீனவ விவசாயிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சாகர் மித்ரா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6.11 கோடி விவசாயிகள் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

சுய உதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

விளைப்பொருள்களை இணையத்தில் விற்பனை செய்ய அரசு தரப்பிலிருந்து ஊக்கமளிக்கப்படும்.

Categories

Tech |