ரயில்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்கப்படும் என்ற செய்தி பரவி வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்வே துறையில் 53 வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வருடமும் சீனியர் சிட்டிசன்களுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு டிக்கெட் கட்டணத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டுசீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்களில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் கடல் 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரயில்வே சுமார் 1,500 கோடி ரூபாயை சேமித்துள்ளது. சமீபத்தில் சீனியர் சிட்டிசன் களுக்கு சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த நிலையில் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அது சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள்,நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.