ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் என்ற பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்துவருகிறார். இவருக்கு மூன்று வயதில் புணர்விகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வேணுகோபாலுக்கு தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில் தனது மகளை நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி இரவு 11 மணியளவில் குழந்தைக்கு அவரது தாய் மஞ்சள் நீரூற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.
அதன்பிறகு சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயற்சி செய்தனர். அதனைக் கண்ட குழந்தை கத்தி கூச்சலிட்டது. அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். அதன்பிறகு வேணுகோபால் அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டி வைத்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தது. வாயில் குங்குமம் திணிக்கப்பட்டதால் குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.