ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிஹார் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனைப் போல பிற மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் பரவி வருகிறது.
அதனால் தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.