வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை காசிம் தெருவில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான தாவித்ராஜா(20) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தெற்கு நுழைவு வாயிலில் மயங்கிக் கிடந்த ராஜாவை அவரது தாய் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ராஜா அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் ராஜா தனது நண்பர்களான சங்கீதா, ஜீவா, ராஜேஷ், பார்த்திபன் ஆகியோருடன் இரவு நேரத்தில் பூங்காவில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து மதுபோதையில் ராஜா சங்கீதாவின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜேஷ், பார்த்திபன், ஜீவா ஆகிய மூன்று பேரும் இணைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மயங்கி விழுந்த ராஜாவை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தின் தெற்கு நுழைவு வாயிலில் போட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சங்கீதா உள்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.