அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவத்திற்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக பீகார் , உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நீடித்து வருகின்றது. அதனால் சில மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் 12க்கும் மேற்பட்ட ரயில்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர். அதனால் ரயில்கள் பெருமளவு சேதம் அடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 விரைவு ரயில்கள் மற்றும் 140 பயணிகள் ரயில்கள் உட்பட 340 ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் .குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போராட்டம் நீடித்து வரும் வழித்தடங்கள் வழியாக செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.