ஆபாச புகைப்படத்தை வெளியிடப்போவதாக பெண் இன்ஜினியரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தபோது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். பின்னர் அவருடைய செயல்பாடு சரியாக இல்லாததால் அவரிடம் இருந்த நான் விலகிவிட்டேன். அதன் பிறகு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நான் வேலை பார்த்து வருகிறேன்.
இந்நிலையில் செல்போன் மூலம் முகேஷ் என்னை தொடர்பு கொண்டு காதலிக்கும்போது உன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட போகிறேன் என மிரட்டினார். மேலும் அதனை பதிவிடாமலிருக்க 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என என்னை வற்புறுத்தினார். எனவே முகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளம்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகர்கோவிலுக்கு வந்த முகேஷை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.