வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். பயனாளர்கள் மாதம் அல்லது வருடக்கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் போன்றவை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றும் ஜூயன் பிரான்சியோ.
இந்த நிலையில் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றும் ஜூயன் பிரான்சியோ மற்றும் சில நடிகர், நடிகைகள் நெட்பிளிக்ஸ் தொடர் படப்பிடிப்பிற்காக மெக்சிகோ நாட்டின் முலிஜி நகருக்கு சென்றிருக்கின்றனர். படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் ஒரு வேனில் பஜா என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றும் ஜூயன் பிரான்சியோ நடிகர்கள் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த படக்குழுவினர் 6 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.