காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் டைரக்டர் டாக்டர் கலைச்செல்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் 75 ஆவது வருட நிறுவன நாள் வரும் ஜூலை 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக குறைந்தது 5 புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கின்றோம். அதில் முதல் வெற்றியாக முக்கிய கண்டுபிடிப்பாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச கூடிய ஒரு திடப் பொருட்களை எங்களது விஞ்ஞானிகள் டாக்டர் ரவி பாபு, டாக்டர் ஸ்ரவந்தி, டாக்டர் சிவசண்முகம், டாக்டர் வாசுதேவன் போன்றோர் இணைந்த குழுவினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.
மேலும் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு சாக்ஸ் – நாக்ஸ் என்ற கலவையில் வெளிவருகின்றது. இதில் உள்ள கார்பன்டை ஆக்சைடு மிகச் சரியாக பிரித்து மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய விதமாக ஒரு மாற்றம் செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கின்றோம். இந்திய அளவில் சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தான் முதன் முறையாக திட நிலையில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி கூடிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை தொழில் நிறுவனங்களின் பயன்படுத்துவதன் மூலமாக புவி வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.