மளிகை கடைக்கு பொருள் வாங்குவது போல் வந்த இரண்டு நபர்கள் பெண்ணிடம் 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நிலையில் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையை அடுத்த உள்ள காஞ்சிக்கோவில் காந்திநகரை சேர்ந்த முத்தாயம்மாள் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 08.30 மணி அளவில் கடைக்கு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின் அவர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டிருக்கின்றனர். இதனால் முத்தாயம்மாள் தண்ணீர் பாட்டில் எடுப்பதற்காக திரும்பியபோது அவர் அணிந்து இருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் பவானி கூலிக்காரன்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் பெருமாள் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் முத்தாயம்மாளிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து ஈரோடு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.