கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியாகி உள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அருகே இருக்கும் செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் விவசாயி. இவர் தினம்தோறும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள அவரின் தென்னந்தோப்புக்கு சென்று கீழே விழுந்திருக்கும் தேங்காய்களை சேகரித்து வருகின்ற நிலையில் நேற்று காலையும் சென்றிருக்கின்றார்.
அப்போது தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்திருக்கிறது. அதை அவர் கவனிக்காமல் மிதித்து விட்டதால் மின்சாரம் அவரை தாக்கி இருக்கின்றது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரின் செல்போனுக்கு உறவினர் ஒருவர் தொடர்பு கொள்ள இதனால் மனைவி சுந்தரி தோப்புக்கு வந்தபொழுது மின்கம்பி தரையில் அறுந்து விழுந்து இருப்பதையும் அதன் அருகிலேயே சுப்பிரமணி விழுந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியுற்று கதறிக்கதறி அழுதிருக்கின்றார். இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.