கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் இன்றைய இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகியுள்ளதை நேரடியாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ள அவர், இளைஞர்கள் திறமையும், அறிவும், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்டவர்கள், இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல, வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்கள் என்றும் தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலையின்மை குறித்து நேரடியாகப் பேசாவிட்டாலும், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளால், வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புத் துறைக்கான அறிவிப்புகள்:
-
மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொதுத் துறை வங்கிகளில் உள்ள அரசிதழ் பதிவுபெறாத பணிகளுக்கான ஆள்சேர்ப்புப் பணிகளில் முக்கிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பணிகளுக்காக தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு, சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
-
மாநில அரசுகளை தேவைகளுக்கேற்ப நிதித் திட்டங்களை வகுத்தளிக்குமாறும், அவற்றிற்கேற்ப மத்திய அரசால் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
-
முதலீடு தொடர்பான ஆலோசனைகள், முதலீடுகள் வழங்கும் வங்கிகள் என முதலீட்டாளர்களுக்கு உதவிடும் வகையில், மாநில அளவிலும், மத்தியிலும் முகமைகள் அமைக்கப்படும்.