வங்காளதேசத்தின் வட கிழக்கு பகுதிகளில் சென்ற ஒருவார காலமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இருக்கக்கூடிய பல மாவட்டங்கள் வெள்ளத்தில்மூழ்கி தத்தளித்து வருகிறது. வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பருவ மழையின்போது மழை மற்றும் வெள்ளபாதிப்பு ஏற்படுவது வழக்கம் என்றபோதிலும், சென்ற காலங்களில் இல்லாத அளவுக்கு இப்போது கனத்த மழை கொட்டிவருகிறது. இதன் காரணமாக அந்நாடு கடந்த 122 வருடங்களில் பார்க்காத அளவிற்கு மிக மோசமான வெள்ளபாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக சில் ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் போன்ற இருமாவட்டங்களும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இருமாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனிடையில் வீடுகளை இழந்த மக்கள் பள்ளிக்கூடங்களில் முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளம் காரணமாக ஏராளமான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கியிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கன மழைக்கு இதுவரை வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் சிறுவர்கள் உட்பட 41 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அத்துடன் இந்த கன மழையால் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.