Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாஜகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டா?’ – ப. சிதம்பரம் ஆதங்கம்

தனக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமரவைத்த வாக்காளர்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டையா பரிசளிப்பது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

“நாட்டின் நிதியமைச்சர் 160 நிமிடங்களுக்கு மிகப் பெரிய பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார். உங்களைப் போலவே நானும் இந்த நீண்ட உரையைக் கேட்டு களைப்படைந்துள்ளேன். பட்ஜெட் குறித்த எனது கருத்துகள்:

  1. 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் எந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பட்ஜெட் உரையில் சொல்லிக்கொள்ளும்படியான அறிவிப்புகளோ, திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

  2. அரசு பொருளாதாரத்தை சீர்திருத்த, வளர்ச்சியை அதிகரிக்க, முதலீட்டை ஈர்க்க, தனியார் துறையை ஊக்குவிக்க, உலக வர்த்தகத்தில் இந்தியா போட்டிபோட எந்த விதமான நடவடிக்கைகளையும் அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

  3. ஏற்கனவே அறிவித்து நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதுப் பெயரை கொடுத்து மக்களைக் குழப்பும் விதமான அறிவிப்புகளே பட்ஜெட்டில் உள்ளன. உண்மையான பாஜக மக்கள் பிரநிதிகள்கூட மக்களிடம் இந்த பட்ஜெட்டின் நல்ல அம்சங்கள் உள்ளன என்ற கொண்டு சேர்க்க முடியாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். நடப்புத் திட்டங்கள் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அத்திடங்களில் மேலும் பணத்தைச் செலவிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

  4. வரித்தீவிரவாதம், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக செயல்படுத்திவரும் இந்த அரசு, இந்த பட்ஜெட்டிலும் அதைத் தொடருகிறது. சந்தைபொருளாதாரம், தாராளமையம் சார்ந்த நடவடிக்கைகளில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. பொருளாதார ஆலோசகருக்கே இது ஏமாற்றம் தரும்.

  5. இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளது என்பதை முற்றிலும் புறக்கணித்துவரும் இந்த அரசு, வளர்ச்சியை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2020-21 ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6-6.5 விழுக்காடாக இருக்கும் என தெரிவித்திருப்பது ஏமாற்று வேலை.

  6. இந்தியப் பொருளாதாரம் தேவைப் பற்றாக்குறையிலும், முதலீட்டு சிக்கலிலும் தவித்துவருகிறது. இந்த இரு பெரும் சிக்கலிலிருந்து மேம்பட இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த இரு சிக்கலும் தொடரும்பட்சத்தில் இந்திய பொருளாதார மந்தநிலைத் தொடர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

  7. உணவு மாணியம், உர மாணியங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சாமானிய மக்களின் விலைவாசி உயர்வு சுமை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துவருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  8. கடந்த 2019-20ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கணக்கிடப்பட்ட எந்த இலக்குகளையும் இந்த நிதியாண்டின் இறுதியில் எட்டவில்லை. வரும் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளும் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும் என்பதில் எந்தவித நம்பிக்கையும் இல்லை.

  9. அடிப்படை சீர்திருதத்தங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. தேசிய பொருளாதார ஆலோசகர் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் படித்துப் பார்த்துதான் இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

  10. மொத்தத்தில் இது நாட்டிற்கு தேவையை பூர்த்தி செய்யும் பட்ஜெட் இல்லை. பாஜகவுக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமர வைத்துள்ள மக்களுக்கு இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை அரசு அளித்துள்ளது. ஆனால் இந்த பட்ஜெட்டை சகித்துக்கொண்டு ஏற்றுக்கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை”. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |