ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலை சேர்ந்த தமிழரசன் என்பவர் ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக வேலை செய்து வருகின்ற நிலையில் இவர் ஈரோடு நாச்சியப்பா வீதியில் சக தொழிலாளர்களுடன் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சென்ற வாரம் ஒப்பந்ததாரரின் கணக்காளருக்கும் இவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டதையடுத்து கைகலப்பில் முடிந்தது.
இதையடுத்து தமிழரசன் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற் கொண்டார்கள். பின் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கின்றது.
இதனால் தமிழரசன் நேற்று மதியம் 3 மணியளவில் புகார் அளிப்பதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து இருக்கின்றார். அப்பொழுது கையில் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்று இருக்கிறார். இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த டீசல் கேனை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின் தமிழரசனிடமும் கோரிக்கையை கேட்டறிந்த போலீஸார் ஈரோடு டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.