பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வட மாவட்டங்கள் தேர்வில் கடைசி இடங்களைப் பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார். இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது வேதனை அளிக்கிறது என்றார்.
இந்த வருடமும் வடமாவட்டங்கள் தேர்வில் கடைசி மாவட்டங்களாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதன்பிறகு பெரம்பலூர் மாவட்டம் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் முதலிடமும், கன்னியாகுமரி மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடமும் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதன்பிறகு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் அடுத்து வரும் துணைத் தேர்வில் வெற்றி பெற்று உயர்நிலை கல்விக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து வேலூர் மாவட்டம் தான் இந்த வருடமும் தேர்வில் கடைசி மாவட்டமாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கு காரணம் தனித்தனியாக மாவட்டங்களை பிரித்ததாக கூட இருக்கலாம் என்றார். எனவே உயர் அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்பிறகு 12-ம் வகுப்பு தேர்வில் புதுக்கோட்டை, திருவாரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடைசி 10 இடங்களை பிடித்திருக்கிறது.
இதேப்போன்று 10-ம் வகுப்பு தேர்வில் திருப்பூர், புதுக்கோட்டை, கரூர், ராணிப்பேட்டை, திருவாரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளது. இதில் காவிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்கு முன்பாக நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தர்மபுரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தேர்வில் பின்னடைந்த மாவட்டங்களாக இருந்தது. இந்த முறை ஓரளவு தேர்வில் முன்னேறியிருப்பது சற்று மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் வட மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளில் தான் அதிக அளவில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றும் பள்ளிகள் இருக்கிறது. இதனால்தான் வடமாவட்டங்கள் கல்வியில் பின்னடைந்த மாவட்டங்களாக இருக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வியில் பின்னடைந்த மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் நான் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.