இலங்கைநாட்டில் அதிபரின் வானளாவிய அதிகாரத்தை ரத்து செய்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் அடிப்படையில் 21வது சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் மந்திரி சபையில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இந்த 21வது சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று சுற்றுலாமந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த 21வது சட்டதிருத்தம் பல சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது.
அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடவும், அரசு பதவிகளை வகிக்கவும் இது தடை விதிக்கிறது. இந்த 21வது சட்டதிருத்தத்துக்கு ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தது. இந்த சட்டதிருத்தத்துக்கு பதில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதே முக்கியம் என்று கூறி வருகிறது. எனினும் இந்த சட்ட திருத்தத்தில் உறுதியாகயிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க் கட்சியினர், அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.