திருப்பதி மாவட்டம் கூடூர் அடுத்துள்ள ராணிப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நாயுடு பேட்டையை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரோடு சென்ற 2007ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். லாரி டிரைவராக பணிபுரிந்த சுரேஷ் கடந்த 3 வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து ராஜலட்சுமி மற்றும் அவரது மாமியார் சுஜாதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜலட்சுமி தன்னுடைய குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு, நாயுடு பேட்டையிலுள்ள தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையில் அடிக்கடி கூடூருக்கு சென்று குழந்தைகளை பார்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சென்ற மேமாதம் 25ஆம் தேதியன்று மருமகள் ராஜலட்சுமிக்கு தெரியாமல் அவரது 14 வயது மகளுக்கு மாமியார் சுஜாதா, வெங்கடாச்சலம் மண்டலம் பூடிபர்த்தி பகுதியை சேர்ந்த சீனிவாஸ் (40) என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த ராஜலட்சுமி கூடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.