மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து வாப்கோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸின் தலைவர் கன்னியப்பன கூறுகையில், ”இந்த பட்ஜெட்டில் நிறைய புதிய முயற்சிகளும் ஆக்கப்பூர்வத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகளையும், கிராமப்புற மக்களையும் குறிவைத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களின் வருமானத்தை மும்மடங்காகப் பெருக்கும் விதத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்புத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சி. மேலும் திறன் மேம்பாட்டிலும் முதலீடு செய்யப்படுள்ளது. இந்த முதலீடுகள் நிச்சயம் நாடு முழுவதும் பெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மின்னணு உற்பத்தியிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த பட்ஜெட் நிச்சயம் ஒரு நல்ல முன்னெடுப்பு.
சில ஏற்றத்தாழ்வுகளுக்குப் பிறகு ஆட்டோமொபைல் துறை சீராகிவரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள சில அறிவிப்புகள் அத்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 15 வருடங்களுக்கு மேலான வாகனங்களுக்கு ஊக்கத் தொகையளிக்கும் ஸ்க்ராப்பேஜ் பாலிசி அறிவிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த அறிவிப்புகள் வெளிவந்திருந்தால் மக்கள் தங்கள் வண்டிகளை புதுப்பிக்க முன்வருவார்கள். மீண்டும் வரும் ஆட்டொமொபைல் துறைக்கு அது ஒரு உந்துதலாக இருந்திருக்கும். இந்த அறிவிப்பு வெளியாகாதது மட்டும் சிறு ஏமாற்றத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து, CII அமைப்பின் தலைவர் சந்திரமோஹன் ”சரக்கு மற்றும் சேவை வரிகளில் இறுதிப்பொருட்களுக்கான வரியைவிட மூலப்பொருட்களுக்கான வரி அதிகமிருக்கும் இன்வெர்டெட் ட்யூட்டி எனப்படும் தலைகீழ் வரி குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தனியே இதுகுறித்து விவாதிக்க ஒருவேளை முடிவிடுத்திருக்கலாம். ஆட்டோமொபைல் துறையில் ஸ்க்ராப்பேஜ் பாலிசி கொண்டு வரப்படுமென எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதுகுறித்தும் தனியே அறிவிப்புகள் வருமென எதிர்ப்பார்க்கிறோம்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்திலும், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
நேரடி வரிகளுக்கான ஸ்லாப் விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் மக்களின் சேமிப்பு அதிகரித்து முதலீடுகள் அல்லது நிலையான சொத்துக்களின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அல்லது மக்களின் வாங்கும் சக்தி இதன்மூலம் அதிகரித்தாலும் நிச்சயம் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார மந்தநிலையிலிருந்து நிதானமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதத்திலேயே இந்த பட்ஜெட்ட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.