தமிழக முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. அதாவது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர். அதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்து அதிமுக ஒன்றிய தலைமை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொளுத்தி போட என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பன்னீர்செல்வம் திகைத்துப் போனார். இதனையடுத்து பன்னீர்செல்வம் தற்போதைக்கு ஒற்றை தலைமை வேண்டாம் என்று இரட்டை தலைமையின் கீழ் அதிமுக நன்றாக சென்று கொண்டு இருக்கிறது என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகத் தெரிவித்தார். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்கள் மூலம் அதிமுக ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற கருத்தை ஊடகங்களின் மூலம் கூறி வருகிறார்.
தற்போது அதிமுகவில் நிலவரப்படி எடப்பாடி பழனிச்சாமியின் கையை ஓங்கி நிற்கிறது. பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பக்கமே துணை நினைக்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழக்கம்போல் ஏமாற்றமே கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்த பிறகு, எதிர்கட்சித் தலைவர் யார் என்பதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையில் கடும் போட்டி நிலவியது. அப்போது தனது திறமையை பயன்படுத்திய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் காய் நகர்த்தி அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தட்டிப் பறித்தார். மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் பெயரளவுக்கே ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என்ற உண்மையை யாராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிச்சாமி சைலண்டாக வீசும் யார்க்கர் பந்துகளில் ஓ.பன்னீர்செல்வம் தப்பிக்க முடியாமல் கிளீன் போல்டு ஆகி வருகிறார். இந்த முறையும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு கையெழுத்து போட்டே ஆகவேண்டிய என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.