அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி, தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை மாற்றுத்திறனாளி சிறுமி (12 வயது) பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 11 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக 2019 டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதனிடையே 17 பேரில் பாபு என்பவர் சிறையிலேயே மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்ஷோ நீதிபதி மஞ்சுளா 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் (55) மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்படுவார் என்றும், மற்ற 15 குற்றவாளிகளுக்கு (3-ஆம் தேதி) நாளை தண்டனை விவரம் வெளியாகும் எனவும் தீர்ப்பளித்தார். பின்னர் 15 பேரும் போலீசார் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.