மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பா.ம.க இளைஞரணி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு. கிள்ளனூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பா.ம.க இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணிகண்டன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து விக்னேஷின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.