அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 11 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக 2019 டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதனிடையே 17 பேரில் பாபு என்பவர் சிறையிலேயே மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்ஷோ நீதிபதி மஞ்சுளா 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் (55) மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்படுவார் என்றும், மற்ற 15 குற்றவாளிகளுக்கு (3-ஆம் தேதி) இன்று தண்டனை விவரம் வெளியாகும் எனவும் தீர்ப்பளித்தார். இந்தநிலையில் இன்று தண்டனை அறிவிப்பு வெளியாக இருக்கிறது.