அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை வரையறை செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. அதன்படி ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து வைத்திலிங்கத்தை துரோகி என்று தொண்டர்கள் கூறியதால் அவர் மேடையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். இந்நிலையில் மேடையில் ஏறிய பன்னீர் செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு அங்கிருந்து சென்றனர். அப்போது ஓபிஎஸ் வந்த காரின் டயர் பஞ்சர் செய்யப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தின் போது அ.தி.மு.க கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தின்போது கட்சியின் மூத்த அதிகாரிகள் இரட்டை தலைமையால் அ.தி.மு.க கட்சி தன்னுடைய பலத்தை இழந்து விட்டதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்று வலுவான ஒற்றைத் தலைமையை கொண்டுவரவேண்டும் எனவும் கூறினர். அதன்பிறகு ஒற்றைத் தலைமை வந்தால் மட்டுமே ஒரு நிலையான எதிர்க் கட்சியாக அ.தி.மு.க இருக்கும் எனவும், மக்கள் மத்தியில் அ.தி.முக. கட்சியின் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்காமல் இருக்க முடியும் எனவும் மூத்த நிர்வாகிகள் கூறினர். இந்த கூட்டமானது ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படும் என தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.