சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கனகா. இவர்களுடைய மகள் மகாலட்சுமி(5), ராசுவின் தம்பி சந்திரன் என்ற விக்கி (19) இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார்கள். இந்தநிலையில் சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போன் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறாள். இதனை கண்ட சந்திரன் சிறுமியை கண்டித்துள்ளார். மேலும் சிறுமியிடம் இருந்து செல்போனை பறித்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராசு என் மகளை எப்படி அடிக்கலாம் என கேட்டு தம்பி சந்திரனை கண்டித்துள்ளார். இதில் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ராசு தனது தம்பி சந்திரனை கீழே தள்ளி அருகில் கிடந்த பெல்டால் அவரது கழுத்தை இருக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் அகஸ்டின் பால் சுதாகர் நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கொலையான சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த நொளம்பூர் போலீசார் ராசுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கொலையான சந்திரன் மீது நான்கு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்.