குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆலை அமைக்கும் முயற்சி பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு, தாமிரம் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு அதனை காவலாளிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் குடோனுக்குள் புகுந்து தளவாட பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தளவாட பொருட்கள் இருந்த குடோனுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி குடோனில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.