வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் ஓட்டுநரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் சசிகலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது தாயார் தங்கதாய், தந்தை ராமன், சகோதரி மாலதி, மாலதியின் கணவர் கிங், லட்டுதாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் மணிகண்டனின் தந்தை ராமன் இறந்துவிட்டார். இந்த வழக்கினை விசாரித்த மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் மணிகண்டனுக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் தங்கத்தாய் உள்ளிட்ட 4 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.