தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரு சில மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்தில் நாளை முதல் தடுப்பூசி கட்டாயம் எனவும், செயலக ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் பொதுத் துறை துணைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் புதிய வகையான கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளபடியாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும், சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.