அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969ம் வருடம் அப்பலோ 11 விண்கலம் மூலமாக நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 47 பவுண்டுகள் சந்திர பாறைகள் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது நிலவின் பாறைகள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை கண்டறிவதற்காக நாசா ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் பூச்சி மற்றும் மீனிற்கு உணவாக வழங்கப்பட்டது. அதன்பின் கரப்பான்பூச்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் கரப்பான் பூச்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனால் நிலவின் துகள்கள் நச்சுத்தன்மை வாய்ந்தது அல்லது பூச்சிகளின் வேறு ஏதேனும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதற்காக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாசாவிற்கு சொந்தமான 40 மில்லி கிராம் நிலவு தூசி மற்றும் மூன்று இறந்துபோன கரப்பான்பூச்சிகள் கொண்ட ஒரு குப்பியை உள்ளடக்கிய சோதனையின் பொருள் தற்போது ஏலத்திற்கு வந்திருக்கின்றது. இது குறைந்த பட்சம் 400,000 அமெரிக்க டாலர்கள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஏல விற்பனையை நாசா தடுத்துள்ளது.
மேலும் நாசா வழக்கறிஞர் ஒருவர் எழுதி அனுப்பிய கடிதத்தில் இவை இன்னும் மைய அரசுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார். ஏலம் விடக்கூடிய நிலவு தூசி மற்றும் 3 கரப்பான்பூச்சிகள் அடங்கிய குப்பி நாசாவை சேர்ந்தது எனவும் இந்த பொருட்கள் ஆய்வுக்குட்படுத்திய பின் அதனை விற்க்கவோ, தனி நபர் வைத்திருக்கவோ அல்லது பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்கள் காட்சிக்காக வைத்திருக்க அனுமதி அளிக்கப்படவில்லை என கடிதம் வாயிலாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் இந்த பொருட்களை ஏலம் விடுவது உடனடியாக நிறுத்துங்கள் என நாசா தெரிவித்துள்ளது.