பட்டாபிராம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் எனும் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி வேனை ஆவடியை அடுத்த கண்ணியம்மன் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மூன்று தினங்களாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் இரண்டு பெண்கள், 2 ஆண்கள், ஒரு கைக்குழந்தை என ஐந்து பேரை மினி வேனில் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் சென்றுள்ளார். அப்போது பட்டாபிராம் அடுத்த நிமிலிச்சேரி அருகே சி.டி.எச் சாலையில் சென்றபோது திடீரென மினிவேனின் முன்புறமுள்ள எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது உடனடியாக விஜயகுமார் சாலையோரமாக மினி வேனை நிறுத்தியுள்ளார்.
அதன் பின் அதிலிருந்து குழந்தை உட்பட ஐந்து பேருடன் விஜயகுமார் மினி வேனில் இருந்து கீழே இறங்கினார். காற்றின் வேகத்தால் தீ மளமளவென மினி வேனில் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்தநிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் மினிவேனில் இருந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மினிவேன் முழுவதுமாக எரிந்து நாசமானது. உடனடியாக கீழே இருந்து இறங்கியதால் மினி வேனில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 5 பேர் மற்றும் டிரைவர் விஜயகுமார் என அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.