அரியலூரில் உள்ள சரக்கு குடோனில் இருந்து ஏற்பட்ட ரசாயனக் கசிவால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.
மணலி அருகே அரியலூரில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த குடோனில் இருந்து ஒருவிதமான ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு அருகில் உள்ள கடப்பாக்கம் கன்னியம்மன் பேட்டை போன்ற பல கிராமங்களுக்கு பரவியதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், லேசான மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு முழுவதும் ரசாயனக் கசிவு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மாதாவரம் எம்எல்ஏ சுதர்சனம், மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை அரியலூர் பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட சரக்குக் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஏராளமான கண்டெய்னர் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் எதிலிருந்து ரசாயனம் கசிகிறது என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன் பின் நிபுணர்கள் மூலமாக கசிவு ஏற்பட்ட கண்டெய்னர் பெட்டியை கண்டுபிடித்துள்ளனர். அதில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் ஒன்றில் இருந்துதான் ரசாயனக் கசிவு ஏற்படுவது தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக கசிவை தடுத்து நிறுத்தினர். மேலும் விசாரணையில் அந்த கண்டெய்னர் பெட்டி மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதும் அதில் எச்ஐவி நோய்க்கு மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயன மூலப்பொருளில் அடங்கிய பேரல்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கண்டெய்னர் பெட்டியில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பேரல்களில் இருந்த ரசாயனம் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த கண்டெய்னர் பெட்டி முழு பாதுகாப்புடன் அகற்றப்பட்டு ரசாயன கசிவு சரி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ரசாயன பொருட்கள் அடங்கிய பேரல்கள் இருந்த கன்டெய்னர் பெட்டி ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குடோனில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நிலைகள் பற்றி மணலி மண்டல அதிகாரிகள் தொழிற்சாலை பாதுகாப்பு துறை துணை இயக்குனர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.