இலியுஷின் II-76 ரக ராணுவ சரக்கு விமானம் திடீரென விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 121-வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதனை அடுத்து உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதற்கிடையில் மேற்கு ரஷியாவில் ரியாசன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மகாணத்தில் 9 பேருடன் பயணித்த இலியுஷின் II-76 ரக ராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் உக்ரைன் போருக்கு ரஷியாவில் இருந்து ஆயுதங்களை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இந்த விமான விபத்து எஞ்சினில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.