பட்டாசு வெடித்து உயிரிழந்த 3 பேரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் சித்ரா, அம்பிகா, சத்யராஜ், வசந்தா, ராஜி வனிதாவின் சகோதரர் ஜிந்தா ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைத்தியலிங்கம், பழனிவேல் என்ற 2 பேர் பட்டாசு வாங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை வெளியே நிற்குமாறு கூறி விட்டு தொழிலாளர்கள் உள்ளே சென்று பட்டாசை எடுத்து விட்டு வருவதாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வைத்தியலிங்கம், பழனிசாமி ஆகிய 2 பேரும் அலறியடித்து கொண்டு ஓடினர். அப்போது வைத்தியலிங்கத்தின் காலில் பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வசந்தா, வைத்தியலிங்கம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த சித்ரா, அம்பிகா, சத்யராஜ் ஆகிய 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த 2021-ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது. தற்போது வனிதா உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது