போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் குளிர்பான கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 354 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்சுதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராமன் அந்த கடையை பூட்டி சீல் வைக்க அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி துணை சூப்பிரண்டு சரோஜா, துணை தாசில்தார் கருப்பையா, உணவு பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.