தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு சென்றடைந்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவை தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி சென்னையிலிருந்து கடந்த மாதம் கப்பலில் முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கடந்த 21-ஆம் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 14 ஆயிரத்து 700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் என மொத்தம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 2-வது கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர் ஆகியவை நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்துள்ளது. இதனை அடுத்து நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பைலட்டை தமிழக அரசு
இந்த நிகழ்ச்சியில், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா, வர்த்தக அமைச்சர் நளின் ஃபெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், ராதாகிருஷ்ணன், உதய குமார், அங்கஜன் ராமநாதன், செந்தில் தொண்டமான் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.