அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இரு பெரும் தலைவர்கள் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறிய போது அதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது எதற்காக என்றார்.
அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்தின்போது ஓ. பன்னீர் செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்ததோடு, அவரை தகாத வார்த்தைகளால் எடப்பாடி ஆதரவாளர்கள் பேசியுள்ளனர். ஆனால் அவர்களை எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்கவில்லை. இந்நிலையில் தங்களை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் சிலர் தான் ஒற்றைத் தலைமை பிரச்சினையை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். கடந்த 9-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் 2 பேரும் சேர்ந்து கட்சியை நன்றாக வழிநடத்தி செல்கிறோம் என்று கூறினார்.
இப்படி சொல்லிய எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் போது எதையும் கண்டுகொள்ளாமல் அமைதி காத்தார். இந்நிலையில் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருக்கும் நிலையில், கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும் பன்னீர்செல்வத்திற்கு இரட்டை இலைச் சின்னத்தை முடக்கும் எண்ணம் கிடையாது என்றும், அடுத்த மாதம் நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் முறையாக ஆலோசனை நடத்துவார் என்றும் கூறினார்.