ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது அணி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.சி.ஐ. மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்’ என பதிவிடப்பட்டுள்ளது
இந்நிலையில் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பும்ரா கேப்டனாக செயல்பட்டால் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனான வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதற்கு முன்பாக வேகப்பந்துவீச்சாளர் கபில்தேவ் இந்திய அணியை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.