பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மின் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.
இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக காத்திருந்து வாங்கி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க திடீரென எரிபொருட்களின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 75 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனால் 92 ரக பெட்ரோல் 470 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோல் 550 ரூபாய்க்கும், டீசலை 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.