கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி புதூர் கிராமத்தில் மாரியப்பன்-மாசிலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ், கதிர்வேல் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் மற்றும் கதிர்வேல் ஆகிய 2 பேரும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் ஹரீஷ் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி மற்றும் கதிர்வேல் ஆகிய 2 பேரும் கிணற்றில் குதித்துள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் குதித்து 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் ஹரிஷ் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.
மேலும் காயமடைந்த மாசிலாமணி, கதிர்வேல் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.