தீ விபத்தினால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஆணைகவுண்டனூர் பகுதியில் கண்பார்வையற்ற பாலமுத்து(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த 24-ஆம் தேதி பாலமுத்து வீட்டிலிருக்கும் விறகு அடுப்பில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாலமுத்து மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அலறி துடித்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.