நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அதன்படி தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள தங்க நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அரசு பல நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் 48 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14.50 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தகுதியான அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடியானது செய்யப்பட்டது. ஆனால் தற்போது நகைக்கடன் தள்ளுபடி செய்தது தொடர்பாக புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு தணிக்கை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நகைக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 34,984 பேர் நகைக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர். இவர்களிடம் வட்டியுடன் சேர்த்து கடனைத் திரும்ப வசூலிக்குமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை வட்டியுடன் திரும்ப செலுத்தாவிட்டால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.