கடலூர் அருகே பெரிய குப்பத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 வருடங்களுக்கு முன்னால் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் வருடம் வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றார்கள்.
இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள் இந்த நிலையில் கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் சிலர் ஆலைக்குள் நுழைந்து 2 குடோன்களுக்கு தீவைத்து விட்டு சென்றனர். இதில் ஒரு கோடிக்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுபற்றி புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் இன்ஸ்பெக்டர் வினதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையில் புதுச்சத்திரம் அம்மன் கோவில் தெரு கம்பளி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மனைவி கவிதா(வயது 27), ராஜா மனைவி ஜெயஸ்ரீ(38), குறிஞ்சிப்பாடி அன்னதானம் பேட்டையை சேர்ந்த கந்தவேல் மனைவி சாவித்திரி(25), அகரம் காலனியை சேர்ந்த பிரியா(39), புதுச்சத்திரம் கோபாலபுரத்தை சேர்ந்த சித்ரா(40), ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மலர்(35), கிருஷ்ணமூர்த்தி(57), தனுஷ்(26), பி.முட்லூர் காந்தி நகரை சேர்ந்த மகாலிங்கம்(40), கடலூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த குருசாமி(36), குள்ளஞ்சாவடி தெற்கு தெருவை சேர்ந்த சாரங்கம்(40), புதுச்சத்திரம் கம்பளி மேடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(26), குள்ளஞ்சாவடி தெற்குதெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (44), அன்னதானம் பேட்டை பகுதியை சேர்ந்த கந்தவேல் (37), குள்ளஞ்சாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42), புதுச்சத்திரம் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பக்கிரி (60), புதுச்சத்திரம் குறவன்மேடு பகுதியை சேர்ந்த காத்தான் (67), புதுச்சத்திரம் பூச்சி மேடு பகுதியை சேர்ந்த ராஜாராம் (60), செல்வராசு (65), பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தை சேர்ந்த சந்திரன் (36), புதுச்சத்திரம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கண்ணியப்பன் (65), காயில்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சேகர் (58) ஆகிய 22 பேர் என்பது தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து இவர்கள் 22 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.