செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திராவிட முன்னேற்ற கழகத்தை மன உறுதியோடு எதிர்க்கின்ற தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் முன்வைக்கின்ற கருத்து. அந்தக் கருத்தை எல்லோரும் இன்றைக்கு முன்மொழிந்து இருக்கிறார்கள். தர்மயுத்தம் எதற்காக துவங்கப்பட்டது ? தர்மயுத்தம் சின்னம்மா அவர்களை எதிர்த்து, ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்க கூடாது என்று சொன்னார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் சேர்ந்த போது மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டது. ஒன்று புரட்சித்தலைவி அம்மா மரணத்திற்கான காரணத்தை முழுமையாக கண்டறிவதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், சின்னம்மா அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்க்கக்கூடாது, அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும் மாற்ற வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளையும் அண்ணன் எடப்பாடி அவர்கள் நிறைவேற்றித் தந்தார்கள்.
தமிழக அரசின் சார்பில் விசாரணை கமிஷன் அமைத்தார்கள், அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக உருவாக்கித் தந்தார்கள், அதோடு அவரோடு ஒட்டுமில்லை, உறவும் இல்லை என இவர் வைத்த நிபந்தனையின் அடிப்படையில் தான் அவர் அறிவித்தாரே தவிர அவர் தனிப்பட்ட முறையில் அறிவிக்கவில்லை. இவர்தான் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதற்கு அவர்களை நீங்கள் சேர்க்கக் கூடாது என்கின்ற நிபந்தனையை விதித்தார். இதுதான் உண்மையான நிலவரம் என ஆர்.பி உதயகுமார் விளக்கினார்.