குரங்கு காய்ச்சல் 50 நாடுகளில் பரவி விட்டது. மொத்தம் 4100 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதை சர்வதேச பெரும் தொற்றாக தற்போது அறிவிக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் குரங்கு காய்ச்சல் பற்றி அறியப்படாத விஷயங்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது குரங்கு காய்ச்சல் பற்றி தெரிந்த 3 விஷயங்களும், தேர்ந்து கொள்ள விரும்பும் 3 விஷயங்களும் இதில் கூறப்பட்டுள்ளது. முதலில் தெரிந்த மூன்று விஷயங்களை பார்ப்போம்.
- குரங்கு காய்ச்சல் ஒரு வைரசால் பரவுகிறது. அது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த பெரும்மரபணு வைரஸ். சின்னம்மை பெரியம்மை ஆகியவை மனிதர்களை மட்டுமே தாக்கும். ஆனால் குரங்கு காய்ச்சல் வைரஸ் எலிகள் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில பகுதிகளில் உள்ள இதர விலங்குகளில் காணப்படுகிறது. ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஒரு சீரான வைரஸ். அது பெரிய அளவில் உருமாற்றம் அடைவது கிடையாது. ஆனால் தற்போது பலமுறை உருமாற்றம் அடைந்தது தான் இந்த நோய் பரவலுக்கு காரணமாக உள்ளது.
- பொதுவாக அறிகுறிகள் தெரிய எட்டு நாட்களாகும் நிணநீர் முடிச்சுக்கள், வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஜலம் வழியும் மற்றும் கொப்பளம் போன்று காட்சி அளிக்கும். இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கு நீடிக்கும். இந்த நோய் பரவல் குழந்தைகள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மரணமடைய அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் உயிரிழந்தவர்களில் ஏறத்தாழ அனைவரும் குழந்தைகள்தான்.
- குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி பலனளிக்கும். சின்னம்மைக்கு போடப்பட்ட தடுப்பூசிகள் குரங்கு காய்ச்சலுக்கு எதிராக 85% பாதுகாப்பு அளிக்கிறது. குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைகளும் உள்ளது. அவை சின்னம்மைக்கு எதிராக உருவாக்கப்பட்ட சிகிச்சைகள் ஆகும்.
அதனை தொடர்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களை பார்ப்போம்.
- தற்போதைய பரவலுக்கு காரணமான வைரஸ் பல்வேறு மாற்றங்களை கொண்டு உள்ளது. இந்த உருமாற்றங்கள் எப்படி பாதிக்கின்றன, எப்படி பரவுகின்றன என்று தெரியவில்லை.
- குரங்கு காய்ச்சல் பரவ பாலியல் உறவு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதே காரணமாக சொல்ல முடியாது. இது சுவாச மூலம் பரவும் வைரஸ். எனவே தூசுப்படலம் மூலம் பரவ வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலும் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது.
- குரங்கு காய்ச்சல் பரவலாக பரவக்கூடியது. கொரோனா பாதிப்பும் இந்த அபாயத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.