அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியிலிருந்து 40 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டின் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சண்டியாகோ என்ற பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்பொழுது அந்த கண்டெயினரில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த கண்டெய்னரில் இருந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்தவர்களை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே கண்டெய்னரிலேயே 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, “மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறிய அகதிகள் கண்டெய்னர் லாரியில் வந்திருக்கலாம். இதனை அடுத்து அவர்கள் டெக்சாஸ் நகருக்கு வந்த பின்னர் வேறு எங்கு செல்வது என தெரியாமல் லாரியை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிசென்றதால் கண்டெய்னரில் இருந்த அகதிகள் அதிக வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்” என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.