மாணவியின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த சிறுமியின் கருமுட்டைகளை எடுத்த தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுக்கவில்லை என்றால் இப்படி ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதாக மிகப்பெரிய மாபியா கும்பல் சிறுமிகளின் கரு முட்டைகளை திருடி வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பிறகு மாவட்டத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்வதும், சிறுமிகள் கர்ப்பமாவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்றும் கூறுகின்றனர். இது தொடர்பாக குழந்தை நல அதிகாரி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 600 சிறுமிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பேர் கூட புகார் கொடுக்கவில்லை. இதனால் தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிகின்றனர் என்றார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தை பற்றி தெரிவித்தார். அந்த சிறுமியின் வாக்குமூலம் கேட்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.
அதாவது சிறுமி என்னுடைய அம்மா பெயர் இந்திராணி என்றும், என்னுடைய அப்பாவின் பெயர் சரவணன் என்றும் கூறினார். அதன் பிறகு எனக்கு 3 வயது இருக்கும் போது என்னுடைய அம்மா என்னுடைய அப்பாவை பிரிந்து சையது அலி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார் என்றார். இதை தொடர்ந்து நான் வயதுக்கு வந்த நாளிலிருந்து என்னிடம் சையது அலி பல வருடங்களாக தவறான முறையில் நடந்து கொண்டதால் என் உடல்நலம் சரியில்லாமல் போக நான் 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டேன் என்றார். இதனையடுத்து சையது அலி என்னை பல தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வார்.
எனக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தான் என்னுடைய கருமுட்டையை மருத்துவமனையில் எடுக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வந்தது. இதற்கு என்னுடைய அம்மாவும் உடந்தை. இதுவரை என்னிடம் இருந்து 8 தடவைகளுக்கு மேல் கரு முட்டைகளை எடுத்து இருப்பார்கள் எனவும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கினார்கள் என்றும், எனக்கு படிப்பதற்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என்றும், எனக்கு அடிக்கடி வயிறு ரணமாக இருக்கிறது என்றும் சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் என்னுடைய அம்மாவையும், சையது அலியையும் கைது செய்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது என்றும் , எனக்கு படிப்பதற்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.