திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால் சீனிவாசன் மீண்டும் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுப்பதற்கு அதிகாரிகள் எதற்காக தாமதப்படுத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அதிகாரிகள் தூங்கிக் கொண்டு இருப்பதால்தான் நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 1100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது என்று தெரிந்த உடனே அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு நடவடிக்கை எடுப்பது எதற்காக என்றார்.
இதனையடுத்து கோவில் நிலங்களை குத்தகைக்கு விடுவது இந்து அறநிலையத் துறைக்கு தேவையான வருமானம் கிடைக்கும் என்பதால்தான். ஆனால் நிலங்கள் கையகப்படுத்தும் போது அதிகாரிகள் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் இருக்கின்றனர். மேலும் பல பாரம்பரியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பராமரிக்கப் படாமல் இருப்பதற்கு காரணம் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் தான் என்றார். அதன்பிறகு கடந்த 50 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் தற்போது வந்து நிலங்கள் மீட்கப் படுகிறது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி கூறினார்.